சோழ நாட்டைப் பொன்னி நாடு என்றும் , சோழ அரசனைப் பொன்னி நாடன் என்றும் சொல்வதுண்டு. தனது இரு கரைகளிலும் சிவ ஸ்தலங்களையும் விஷ்ணு ஸ்தலங்களையும் கொண்டு ,தெய்வப் பொன்னி இதனை "சோறுடைய" நாடாகச் செய்கிறாள். "சோறு" என்பதற்கு மோக்ஷம் என்றும் பொருள் உண்டு. இப் பிறவிக்கு உணவையும் அடுத்த பிறவியே இல்லாத மோக்ஷத்தையும் அளிக்கும் வள்ளல் இவள். இத் தெய்வ நதியின் பெருமைகளை ஆக்னேய புராணம் முப்பது அத்தியாயங்களால் விரித்துரைக்கிறது. காவேரி ரகசியம் என்றும் வழங்கப்படுகிறது. இதனைத் துலா (ஐப்பசி) மாதத்தில் பாராயணம் செய்வதும் ,உபன்யாசம் செய்வதும் சிறந்த பலன்களைத் தரும். காவேரியைத் தியானித்து, இதனைப் படிப்பவர்கள் காவேரி ஸ்நான பலன்களைப் பெறுவார்கள் என்று சொல்லப் படுகிறது. துலா காவேரி மகாத்மியம் ஆதியில் உமாதேவிக்கு ஸ்ரீ பரமேச்வரன் சொன்ன காவேரி மகாத்மியத்தை , தேவ வன்மன் என்ற அரசனுக்கு,சுமத்திரங்கி என்ற ரிஷி சொல்லத் தொடங்குகிறார். ஒரு சமயம் பார்வதி-பரமேச்வரர்கள் ஒரு நந்தவனத்தில் தங்கியிருந்தபோது அங்கு பறவைகள் வடிவில் வந்த நதி தேவதைகள், துலா மாதத்தில் காவேரியில் ஸ்நானம் செய...