சிசுஹத்தி தோஷம்
எல்லோருக்கும் தெரிந்த ஒரு தோஷமானது பிரம்மஹத்தி தோஷம் என்பது. ஆனால், இது என்ன சிசுஹத்தி தோஷம்?? சிசு என்றால் குழந்தை. ஆக, குழந்தையைக் கொன்ற தோஷம். இதில் சம்பந்தப்படுபவர்கள் யார்? திருமண பந்தத்திற்கும் முன்பாக, உறவுகொள்ளும் ஆண், பெண், அதாவது, ஆங்கிலத்தில் அழகாக உச்சரிக்கக்கூடிய Living Together எனும் சொல். தவிர்க்க இயலாத ஒரு சூழ்நிலையில் பெண் கருத்தரிக்கிறாள், ஆனால், சமூகத்திற்கு காட்ட இயலாது. எனவே, வேறு வழியின்றி, பிறந்த அந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லுதல், அல்லது பிரசவத்திற்கு முன்பாக கருவை கலைத்தல். இப்படி அல்லாமல், முறையாக, திருமணம் செய்துகொண்டவர்கள் கூட இப்போது குழந்தை வேண்டாம் என்று கருவை கலைத்தல் செய்கிறார்கள். ஆக, இவையும் சிசுஹத்தி தோஷத்திற்கு உரியதாக சொல்லப்படுகிறது. அதே போல, சொத்துக்கள் காரணமாக, வாரிசு போரில், உடன்பிறந்தாரின் குழந்தைகளைக் கொலை செய்தலும் சிசுஹத்தி தோஷத்தைக் கொடுக்கும் என்பதை அறிக !
சரி, அறிந்தும் அறியாமலும், ஆசைகளின் காரணமாக, அதாவது உடல் இன்பம், பொருள் இன்பம் என பலவாறாக, காரணம் சொல்லி, தவறு செய்துவிட்டேன். மிகவும் வருந்துகிறேன். அதற்கு என்னதான் பிராயச்சித்தம் என்று கேட்கிறீர்களா?
உலகில் செய்த தவறுகளுக்கும், பாவங்களுக்கும் தண்டனை நிச்சயமே ! நான் அமெரிக்காவில் வாழ்கிறேன், நான் உயர்ந்த பொறுப்பில் இருக்கிறேன், நான் சர்வ வல்லமையுடன் இருக்கிறேன், என்னை யாரும், எதுவும், என்னை ஒன்றும் செய்துவிடமுடியாது என்று நினைக்கிறீர்களா? நினைப்பை மாற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் எந்த மதமாக இருந்தாலும், மனிதர்களே ! இந்த பூமிப் பந்திற்குள் வசிக்கிறீர்கள். அதனால், இறைசக்தியின் ஆளுகையில் நாம் எல்லோரும் கண்காணிக்கப்படுகிறோம் என்பதை மனதில் கொள்ளவேண்டும். நாம் விடும் மூச்சுக்காற்றுக்களின் எண்ணிக்கையும், எந்த நாசித் துவாரத்தின் எத்தனை முறைகள் என்பதை கூட இந்த பிரபஞ்ச சக்தி பதிவுசெய்துகொண்டிருக்கிறது. அதனால், கற்ற கல்வி, வந்த செல்வம், சுற்றம், பதவி, அதிகாரம், உடல் பலம், மனோபலம் ஆக இவற்றின் மூலம் நம்மால் பாதிப்பை உண்டுபண்ண முடியுமே தவிர, தண்டனையை நம்மால் தாங்கிக்கொள்ள முடியுமா ?
சுய கருக்கலைப்பு, குழந்தையைக் கொல்லுதல். குழந்தை பிறக்கும் காலத்தை தள்ளிப்போட, கருக்கலைப்பு செய்தல் தோஷம். 3,7,11 வருடங்கள் குழந்தை பிறப்பு இருக்காது. ஒருவரின் ஜாதகத்தில் 5ஆம் இட கேது இதனைக் குறிக்கும். கேது+குரு சேர்க்கையினால் குழந்தை பிறந்து இறந்துவிடும்.
இந்த பதிவு, ஒரு வழிகாட்டுதலுக்காக, பதிவிடப்படுகிறது. மனிதன், இம்மாதிரியான குற்றங்களைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும். மேலும், நம்மை சூழ்ந்துள்ள சக்திகள், நம்மை குற்றம் செய்ய வைக்கும். அதனால், ஒரே வழி, இறை வழிபாடு. எவரெல்லாம், இறைவனை நம்பி, நாடி, பணிந்து, எல்லாம் உன் அருளே ! என்று வாழ்கின்றார்களோ, அவர்கள் தப்பித்துக்கொள்கின்றனர்.
எனினும், அடியேன் பெற்ற சிறு ஜோதிட கல்வியால், இங்கே பரிகாரம் தரப்படுகிறது. ஆயினும், அதுவும், முன் செய்த புண்ணிய பலனால், இறைவனின் கருணையால், உங்கள் கண்களுக்கு இந்த பதிவு தெரியலாம். பரிகாரம் எதற்கும் முடிவு அல்ல. ஆனால், அதற்காக நாம் செய்யும் முயற்சிகள், நம் தவறை நாம் உணர்ந்து, வருந்துகின்றோம் என்பதை பிரபஞ்ச சக்தி அறிந்திடவே, சித்தர்களும், ஞானிகளும், மகான்களும், யோகிகளும் கண்டுணர்ந்து, இறைவனிடம் மன்றாடி, நமக்கெல்லாம் தந்ததன் பலனை நாம் பெறுகின்றோம் என்பதை உணர்க !!!
பரிகாரம்;
கும்பகோணம் அருகிலுள்ள சூரியனார்கோயில் சமீபமாக உள்ள தல, திருமாந்துறை சென்று வழிபடுவது தீவிரத்தைக் குறைக்கும்.
தோஷ நிவர்த்திக்கு திருமாந்துறை ஶ்ரீ உச்சிஷ்ட கணபதிக்கு அர்ச்சனை – கரும்புத்துண்டு, ஆப்பிள், நாவல் பழம், 10ரூ.எள் உருண்டை, சீன கல்கண்டு, 21 நல்லெண்ணெய் தீபம், 12 நெய் தீபம் போடவேண்டும்.
1 படி பச்சரிசி, 1கி. முழு பேட்டை வெல்லம், மட்டையான தேங்காய், பஞ்சபாத்திரம், உத்தரணி, சொம்பு, 100கிராம் நெய் பாக்கெட், வேட்டி துண்டு, 101 ரூபாய் வைத்து சிவனுக்கு அர்ச்ச்னை செய்து ஐயரிடம் கொடுத்து விழுந்து வணங்கி ஆசிர்வாதம் பெற வேண்டும். நெய் சாதத்தோடு தம்பதிகள் சாப்பிட்டால் தோஷ நிவர்த்தி.
கருத்துகள்
கருத்துரையிடுக