மகான் ஶ்ரீகோரக்கர் சித்தர் யார்?

குருவே சரணம் ! ஓம் நமசிவய ! ஓம் சிவயநம !

மகான் ஶ்ரீகோரக்க சித்தர் யார்? என்ற கேள்வி நம்மில் பலருக்கும் சித்தர் வழிபாட்டில் புதிதாக இணைபவர்களுக்கு தோன்றும். நியாயமே ! காரணம், நாம் பயிலும் பாடபுத்தகங்களிலோ அல்லது தினசரிகளிலோ தமிழ்தேசத்தின் அல்லது இந்திய தேசத்தின் வரலாற்றுப் பக்கங்களில் பெருமைமிக்க சித்தபுருஷர்களின் அற்புதங்கள், சேவைகள், கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்கள் தரப்பட்டிருக்குமேயானால், நிச்சயம் எல்லோரும் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், ஆங்கிலேயர்கள், இஸ்லாமியர்கள் என பல்வேறு தரப்பட்ட வெளிநாட்டு சக்திகளால் இந்த தேசம் ஆட்சி செய்யப்பட்ட காரணங்களால் கோடிக்கணக்கான வரலாற்றுப் பதிவுகள் நமக்கு கிடைக்காமலே போய்விட்டது. இருப்பினும், காலச்சக்கரம், அறிவியல் கண்டுபிடிப்புகளின் வழியே இறைவனின் அனுகிரகத்தால் நம் கண்களில் பட்டு, நம் அறிவை எட்டிவிடும் வாய்ப்பை நாம் பெற்றுள்ளோம். அந்த வகையில், இந்திய தேசம், குறிப்பாக, பாரத தேசம் கடந்தும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் அன்று முதல் இன்று வரை சித்தர்கள் தோன்றி, மானுட சமூகங்களுக்கு பலப்பல நன்மைகளை செய்துவருகின்றனர். அப்படியாக, நமது பாரத தேசத்திலே நவநாத சித்தர் பரம்பரை, பதினென்சித்தர் பரம்பரை என்று வழங்கப்பட்டு வருகின்ற அளவிலே, இவ்விரு பரம்பரை சித்தர்களின் இராஜ்ஜியத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க, போற்றப்படக்கூடிய, வணங்கத்தக்க, கொண்டாடக்கூடிய சித்தர்பெருமக்களின் தலைவராக, சிவமே இவரென வழிபடத்தக்க, கருணை நிறைந்த, ஏங்கி அழைத்தால் ஓடோடி வந்து வழிகாட்டும் குருவாய், ஏழைப்பங்காளனாய் இன்றும் சக்தி ஒளி வீசும் வள்ளலாய் காத்து நிற்கும் எம்பெருமான் தான் மகான் ஶ்ரீகோரக்கநாதர் அவர்கள். 

ஐயனுடைய பெருமைகளை அளவிட முடியாது. நம் ஒவ்வொருவர் வாழ்விலும் எத்தனையோ தெய்வங்களை வணங்குகிறோம், எத்தனையோ சித்த குருமார்களைப் பணிகிறோம்,  ஆயினும், அருள்புரிவதில் ஈசனாகவே ஆனவர் நம்மவர். 

கோரக்கர்=கோ+இரக்கர். அதாவது, கோ என்றால் பசு. இரக்கர் - இரக்கம், கருணை. ஒரு பசு எப்படி பட்டதோ அதைப் போன்ற இரக்க குணம் படைத்த மகான். பெரும் தீர்க்கதரிசி. நீங்கள் கேட்கலாம், இன்றைக்கு எத்தனையோ மக்கள் எத்தனையோ சித்தர்களை நாடிச் செல்கின்றனரே, அப்படி, அத்துணை சித்தர்களும் கருணையில் குறைந்தவர்களா? அப்படியல்ல. ஒவ்வொரு சித்தர்தம் வரலாறும், அவர்களுடைய பங்களிப்பை இந்த உலகத்திற்கு எப்படி செய்துள்ளனர் என்பதை சொல்லும். ஆனால், இந்த மனிதகுலத்தின் மீது ஈசன் எப்படி அன்புகொண்டுள்ளாரோ, அதைப் போலவே, பிற சித்தர்களின் எதிர்ப்பையும் மீறி, பெரும் இரகசியங்களை தம்முடைய நூல்களில் வெளிப்படையாக சொல்பவர் கோரக்கர். 

ஶ்ரீமகாவிஷ்ணு எப்படி, மனிதர்கள் மீதும் பிற உயிர்கள் மீதும் கொண்ட கருணையால், இராமனாகவும், கிருஷ்ணனாகவும் பிறப்பெடுத்து எப்படி வாழ்ந்தால் எப்படி நன்மை பெறலாம் என்பதை உணர்த்தியருளினாரோ, மாபெரும் சக்தி படைத்த கடவுள் எனினும், மானுட சித்தர்கள், ரிஷிகள், முனிவர்கள், யோகிகள், ஞானிகள் ஆகியோருக்கு எப்படி பணிந்து உரிய மரியாதை செலுத்தினாரோ, அதே அளவில், ஈசனே, தாம் அருளிய உபதேச சக்தியை நவநாத சித்தரான ஶ்ரீகுரு மச்சேந்திரநாதரிடமிருந்து பெற விரும்பி, பசுவின் சாணங்களின் சாம்பலிலிருந்தும் கோரக்கராக எழுந்திட்டார் என்பது அனைத்து சித்த வழிபாட்டு சமூகங்களின் அசாத்திய நம்பிக்கை. 

இந்த வலைத்தளத்திலே, அடியேன் மகான் ஶ்ரீகோரக்கநாதருக்கென எழுதிய ஆரத்தி பாடலில் ஐயனுடைய வரலாற்றை சொல்லியிருப்போம். அப்படி சொல்லப்பட்ட கருத்துக்களில் பார்த்தீர்களேயென்றால், நவநாத சித்தர் மந்திரம் என்பது முக்கியமானது. அதில், 9 வரிகள் காணப்படும். அதில், முதலாவதாக, ஓம் ஓங்கார ஆதிநாதாய நமஹ என்று ஆரம்பிக்கும். சரி, இப்போது அந்த மந்திரத்தை கீழே காண்போம்.

ஓம் ஓங்கார ஆதி நாதாய நமஹ
ஓம் ஶ்ரீ உதய நாதாய நமஹ
ஓம் ஶ்ரீ சிவயோகி கோரக்‌ஷ நாதாய நமஹ
ஓம் ஶ்ரீ சத்ய நாதாய நமஹ
ஓம் ஶ்ரீ சந்தோஷ் நாதாய நமஹ
ஓம் ஶ்ரீ அஜல அஜப்பிலி நாதாய நமஹ
ஓம் ஶ்ரீ கஜபிலி கஜகாந்த நாதாய நமஹ
ஓம் ஶ்ரீ சித்தயோகி சௌரங்கி நாதாய நமஹ
ஓம் ஶ்ரீ சித்தயோகி மச்சேந்திர நாதாய நமஹ
இந்த மந்திரத்தில் நன்றாக கவனியுங்கள் ! ஈசன், சக்தி என அடுத்த இடத்திலே சிவயோகியாக யார் இருக்கின்றார் என்று பாருங்கள்.  ஈசனைப் பிரீதி அதாவது மகிழ்ச்சியடைய செய்ய விரும்பும் அன்பர்கள், கோரக்கர் பெருமானை முழுதாக வழிபட்டால், எளிதில் ஈசனை அடையலாம். 

மேலும், இந்தியாவில், தமிழகத்தில், நாகப்பட்டிணம் எனும் பெரும் ஆன்மீகப்பூமி அருகில் வடக்குப்பொய்கைநல்லூர் எனும் ஊரில் நவகோடி சித்தர்கள் ஜீவசமாதி கொண்டு விளங்கும் நிலையில் மகான் ஶ்ரீ போக மகரிஷியால் இரண்டு முறை ஜீவசமாதி நிலைக்கப்பெற்ற பெருமையுடையவராவார். கடற்கரைக்கும் மிக அருகில் விளங்கக்கூடிய தலம் என்றாலும், 2004ஆம் வருட சுனாமியால் எவ்வித சேதமும் அடையாத ஊர் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழகம் மட்டுமல்லாது வடநாட்டிலும் கோரக்கர் பெரிதாகப் போற்றப்படுகிறார். உத்தரபிரதேச மாநிலத்தில், கோரக்பூர் எனும் தலத்தில் மகான் ஶ்ரீகோரக்கநாதருக்கு பெரிய ஆலயம் உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வர் மாண்புமிகு. யோகி ஆதித்யநாத அவர்கள் பூஜிக்கும் இறைவனாக கோரக்கர் காணப்படுகிறார். 

தொடரும்...

கருத்துகள்